வெஜ் கொழுக்கட்டை / VEGETABLE KOZHUKATTAI

Posted in டிபன்

தேவையான பொருட்கள்

அரிசி மாவு                                -              முக்கால் கப்

பீன்ஸ்                                            -              5
கேரட்                                             -            ஒன்று
தக்காளி                                        -            ஒன்று
உருளைக்கிழங்கு                   -            ஒன்று
மிளகாய் தூள்                           -            ஒன்றரை தேக்கரண்டி
கறிவேப்பிலை                        -            ஒரு கொத்து
பொட்டுக்கடலை மாவு       -            ஒன்றரை தேக்கரண்டி
கடுகு                                              -            ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு                    -            ஒரு தேக்கரண்டி
உப்பு                                               -             அரை தேக்கரண்டி
எண்ணெய்

செய்முறை

கேரட், பீன்ஸ் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கை தோல் சீவி பொடியாக நறுக்கி வைக்கவும்.

குக்கரில் ஒரு கப் அளவு தண்ணீரை ஊற்றி, நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு குக்கரில் வைத்து வெய்ட் போட்டு 2 விசில் வந்ததும் இறக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் வேகவைத்த கேரட், பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கைச் சேர்த்து, அதனுடன் மிளகாய் தூள், உப்பு போட்டு நன்கு கிளறிவிடவும்.

பிறகு பொட்டுக்கடலை மாவைத் தூவி ஒரு நிமிடம் நன்கு பிரட்டி இறக்கி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் அரிசி மாவைப் போட்டு அரை தேக்கரண்டி எண்ணெய் ஊற்றவும். முக்கால் கப் அளவு தண்ணீரைக் கொதிக்க வைத்து அதை அரிசி மாவில் ஊற்றி கை பொறுக்கும் அளவு சூட்டில் நன்கு கெட்டியாக பிசையவும்.

ஒரு பிளாஸ்டிக் கவரில் எண்ணெய் தடவி பிசைந்த மாவை பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்து அதில் வட்டமாக தட்டவும். அதன்மேல் தயார் செய்துள்ள மசாலாவை ஒரு தேக்கரண்டி அளவு வைக்கவும்.

அதை அப்படியே மூடி கூம்பு வடிவில் கொழுக்கட்டையாக செய்து கொள்ளவும்.

மீதமுள்ள மாவிலும் இதேபோல் கொழுக்கட்டைகளைத் தயார் செய்து கொள்ளவும். இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி, எண்ணெய் தடவிய இட்லி தட்டில் கொழுக்கட்டைகளை வைத்து மூடி 10 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

சுவையான வெஜ் கொழுக்கட்டை தயார். சூடாகப் பரிமாறவும்.

Beans Health Benefits And Minerals

.