இதயத்தை அன்பால் நிரப்புங்கள்.

Posted in பொன்மொழிகள்

இந்தப் பூமியில் பல மொழிகள் பேசுகிறவர்கள் உள்ளனர். இதிலுள்ள ஒவ்வொரு மனிதனாலும், அவனுடைய மொழியினை மட்டுமே பேசிட இயலும். அந்த மொழியிலேயே மற்றவர்களும் அவனுடன் பேசிடல் வேண்டும் என விரும்புகிறான். ஆனால் இதயம் எனும் மொழி ஒன்று உள்ளது. அதனை அனைவராலும் புரிந்துகொள்ள முடியும். அனைவராலும் கேட்டிடவும் முடியும். இந்த மொழயினையே நான் பேசுகின்றேன். அது எனது இதயத்திலிருந்து உங்களுடைய இதயத்திற்குச் செல்கிறது. இதயம் இதயமுடன் பேசும் பொழுது, எவ்வித கட்டுப்பாடும் இன்றி அன்பு பரிமாறப்படுகிறது. உடன் பதிலளிக்கக் கூடிய இதயமானது, இரக்கத்துடன் அவற்றைக் கவனித்து, அன்பினால் விடையளிக்கிறது. துன்பம், குழப்பம், கடும் வேதனை, பீதி, தேடல் போன்ற இயல்புகள் எல்லா மனித வர்க்கத்திற்கும் உண்டு.

ஒவ்வொருவரும் மன மகிழ்ச்சியுடன் இருக்க ஆவல் கொண்டுள்ளனர். ஒவ்வொருவரும் குறைவாகப் பணி செய்து, அதிகமாகப் பலன் பெற்றிட விரும்புகின்றனர். குறைவாகக் கொடுத்து, அதிகமாகப் பலன் பெற்றிட விரும்புகின்றனர். ஆனால் எவரும், மற்ற எந்த முறையினையும் சோதிக்க விரும்பவில்லை. அதாவது குறைவாக விரும்பி அதிகமாகத் தருவது. ஒவ்வொரு விருப்பமும் இயக்கத்தைத் தடைசெய்திடும். இடையூறாக, பாதத்தைப் பின்நோக்கி இழுத்திடும்.

ஒரு கல்லூரி இளைஞன் இரு கால்கள் கொண்டு சுதந்திரமாகத் திரியலாம். அவன் திருமணம் புரிந்தால், நான்கு கால்கள் கொண்டவனாகிறான். குழந்தை அவனை ஆறு கால்கள் கொண்டவனாக்கிறது. அவனது இயக்கத்தின் வேகம் குறைந்து, பூமியின் பிடிமானம் இன்னும் இறுகி விடுகிறது. மரவட்டை ஊர்கின்றது. அதிகப் பொருட்கள், அதிகத் தடங்கல்கள், அதிகக் குறைபாடுகள், சோபாக்கள், நாற்காலிகள், கட்டில்கள், மேசைகள், அலமாரிகள், அலங்காரப் பொருட்கள் என வரவேற்பறை முழுவதும் பொருட்களால் நிரம்பி, இயக்கமே மெதுவாக, ஆபத்து நிரம்பியதாக உள்ளது.

தேவைகளைக் குறையுங்கள். எளிமையாக வாழுங்கள். அதுவே மகிழ்ச்சியான வழியாகும். பற்றுதல் துயரத்தைத் தந்திடும். ஆனால் மரணமானது அனைத்தையும் பின்னே விட்டுவிட்டு வர வேண்டும் எனவும், அனைவரும் பின் தங்கிவிட, நீங்கள் சோகத்தால் ஆட்கொள்ளப் படுகிறீர்கள். நீரின் மீது உள்ள தாமரையைப் போன்று திகழுங்கள். அதன் மீது இருங்கள். அதனுள் அல்ல. தாமரை வளர்ந்திட, நீர் தேவைப்படுகிறது. ஆனால் அதன் ஒரு துளி கூட தன்னை நனைத்து விடாது அது பார்த்துக் கொள்கிறது.

இந்த லௌகீக உலகே, பண்பின் இருப்பிடமும், ஆத்மாவின் ஆடுகளமும் ஆகும். ஆனால் அதனை அந்த இலக்கிற்காக மட்டுமே பயன்படுத்துங்கள். அதற்கு அதிகமான நிலைக்கு அதனை உயர்த்தி, அதுவே அனைத்திற்கும் முக்கியமானது எனப் போற்றாதீர்கள்.

தங்களால் இறைவனைக் காணமுடியவில்லை என்றால் இறைவனே இல்லை என்று கூறியபடி உள்ளவர்கள் இருக்கின்றனர். அவர்கள் வெளியே, நிலவின் பாதையில், நிலவில் என எங்குமே இறைவனைக் காணவில்லை என்கின்றனர். ஆனால் அவர்களே, எந்நேமும் அவர் வாசம் செய்திடும் மாளிகைகளாகத் திகழ்கின்றனர். எவ்வாறு ஒரு குருடன் மற்றொரு குருடனுக்கு வழிகாட்டிக் கீழே விழச் செய்கிறானோ, கிளியினைப் போன்று இந்த நாகரீகமான வாக்கியத்தை மற்றவர்க்குத் திருப்பிச் சொல்கின்றனர். எவரும் வேர்களைப் பார்க்கவில்லை. ஆனால், அவை மண்ணில் ஆழத்தில் அனைவரதும் கண்பார்வைக்கும் அப்பால் உள்ளன. அதற்காக மரங்களுக்கு வேர்களே இல்லை எனவும், அவற்றைப் போசித்து கீழிருந்து தாங்கிட எதுவுமே இல்லை எனவும் உங்களால் அறுதியிட்டுக் கூற இயலுமா?

இறைவன் உணவளித்துக், காத்து, கண்ணுக்குப் புலப்படாது உறுதியுடன் தாங்கிக் கொள்கிறார். முயற்சி செய்பவர்களுக்கே இந்த இலக்கிற்காக வகுக்கப்பட்ட பாதையில் சென்று அவரை உணர்வதில் வெற்றி கண்டவர்களைப் போன்ற முயற்சிகளில் ஈடுபடுபவாகளுக்கே, அவர் கண்ணுக்குப் புலப்படுவார். இறைவன் பாலில் வெண்ணெயைப் போன்று, சாதனையினால் (ஆன்மீக முயற்சி) திரட்டப்படும் பொழுதே புலனாகிறார்.

பல மாடிக் கட்டித்தின் அடித்தளத்தினை உங்களால் காண இயலாது. அதற்காக அது பூமியின் மீது அப்படியே அமர்ந்துள்ளது என உங்களால் விவாதம் செய்ய இயலுமா? இந்த வாழ்கையின் அடித்தளங்கள் கடந்த காலத்தில் ஆழமாக எழுப்பப்பட்டு விட்டன. ஏற்கனவே நீங்கள் வாழ்ந்த பிறவிகளில் ஏற்படுத்தப்பட்டு விட்டன. இந்த அமைப்பானது, அந்த அந்த பிறவிகளினது அடிப்படைத் திட்டத்தைக் கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளது. கண்ணுக்குப் புலப்படாதவரே வளைவுகளையும், முடிவுகளையும் தீர்மானம் செய்கிறார். மாடிகளின் எண்ணிக்கை, உயரம், எடை போன்றன தீர்மானிக்கப்படுகிறது.

இறைவன் சிறப்பு வாய்ந்த, கண்ணுக்குப் புலப்படாதவரும் விரிந்து பரந்தவரும், அறிய இயலாதவருமாவார். உங்களால் வேர்களைக் காண இயலாவிடினும் அல்லது அது எத்தகு விரிவானது அல்லது எவ்வளவு ஆழமாக பூமிக்குள் சென்று பிடித்துக் கொண்டுள்ளது என்பதனையும் காணாவிடினும், நீங்கள் அதன் அடிப்பாகத்தில் நீர் ஊற்றுகிறீர்கள். அதன் வாயிலாக அந்த நீர் அதனை அடையும் என்பதால் அல்லவா? வேர்கள் நீரைப் பெறுகின்ற பொழுது, மரம் கனியை அளிக்கும் என எதிர்பார்க்கிறீர்கள். அதே போன்று, படைப்பின் அடிப்படையாக இறைவன் இருக்கிறார் என்பதனை உணர்ந்து கொள்ளுங்கள். அவரிடம் பிரார்த்தனை செய்யுங்கள். அவர் உங்களுக்குக் கனியைப் பொழிவார்.

உங்களது மனதை இதர சிதறல்களிலிருந்து பற்றுதலை எடுத்து இறைவனை நோக்கிய தேடலில் உங்களது பற்றுதலை வைத்துக் கொள்ளுமாறு நீங்கள் செய்கின்ற வகையே, யோகமும் (இறைவனுடனான தொடர்பு) தியாகமும் ஆகும். காமமானது (ஆசை) தியாகத்தால் விட்டொழிக்கப்பட வேண்டும். ராமா (இறைவன்) யோகத்தால் பெறப்பட வேண்டும். ஆசை அறிவினை வர்ணமற்ற தாக்கிறது. அது நீதியைக் குலைக்கின்றது. அது புலன்களின் பசியை அதிகரிக்கின்றது. லௌகீக உலகிற்கு பொய்யான தோற்றத்தை அது அளிக்கிறது.

ஆசை மறையும் பொழுது அல்லது இறைவனை நோக்கிக் கவனம் செலுத்தும் பொழுது, அறிவானது தானே விழிப்புணர்வு பெற்று, அதனுடைய மிகச் சிறப்பான பிரகாசத்துடன் ஒளிர்கிறது. அந்தப் பிரகாசமானது உள்ளே மற்றும் வெளியே நிறைந்துள்ள இறைவனை வெளிப்படுத்துகிறது. இதுவே உண்மையான ஆத்ம சாட்சாத்காரம். (தன்னை உணர்தல்) நீங்கள் ஈடுபடுகின்ற சாதனையில் வெற்றியினை அடைந்திட நான் உங்களை ஆசீர்வதிக்கின்றேன்.

இப்பொழுது நீங்கள் எதனையும் பயிற்சி செய்யவில்லை என்றால், நாமஸ்மரணம் (இறைவனை நினைவுறுத்திக் கொள்ளுதல்) போன்ற எளிமையான ஒன்றை மேற்கொள்ளுமாறு உங்களுக்கு அறிவுறுத்துகிறேன். அதனுடன் பெற்றோர்கள், பெரியவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மரியாதை அளித்தல், ஏழைகளுக்கு, நோயுற்றவர்களுக்கு சேவை செய்தல் ஆகியவற்றையும் மேற்கொள்ளுங்கள். அவர்கள் ஒவ்வோருவரையும் உங்களுடைய இஷ்ட தேவதையாக, உங்களுக்கு மிகவும் பிடித்தமான இறைவனின் வடிவமாகப் பாருங்கள். அது உங்களுடைய இதயத்தை அன்பால் நிரப்பி, உங்களது மனம் மற்றும் அமைதிக்கு நிலையான தன்மையை அளித்திடும்.

-சத்ய சாயிபாபா.

.