விற்கப்படாத சாட்டிலைட் உரிமைகள், தவிக்கும் திரையுலகம்

Posted in சினிமா செய்திகள்

தமிழ்த் திரையுலகத்தில் தற்போது ஒரு முக்கியமான பின்னடைவு ஒன்று ஏற்பட்டுள்ளது. அது பல முன்னணி தயாரிப்பாளர்களையும் பாதித்துள்ளது, அதே

சமயம் சிறிய தயாரிப்பாளர்களைப் பெரிதும் பாதித்துள்ளது. முன்பெல்லாம் முன்னணி நடிகர்களின் படம் திரைக்கு வருவதற்கு முன்பே அப்படத்தின் சாட்டிலைட் உரிமை விற்கப்பட்டு வந்தது. தற்போது எந்த ஒரு தொலைக்காட்சி நிறுவனமும் அப்படி அட்வான்சாக படங்களை வாங்க முன்வருவதில்லை. இதனால், பல படங்களின் வெளியீட்டை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருக்கிறார்கள். 

படம் வெளியாவதற்கு முன்னர் சாட்டிலைட் உரிமை வாங்கப்பட்டால் தயாரிப்பாளருக்கு நல்ல விலை கிடைத்து வந்தது. ஆனால், படம் வெளியாகி சரியாக ஓடவில்லை என்றால் அந்தப் படத்தில் முன்னணி நடிகர்கள் நடித்திருந்தால் கூட யாருமே வாங்க முன் வருவதில்லையாம். தற்போதைக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் ஆகியோரது படங்களை மட்டுமே போட்டி போட்டு வாங்குகிறார்களாம். மற்ற நடிகர்களின் படங்கள் வெளியாகி ஓடினால் மட்டுமே நல்ல விலைக்கு பேசப்படுவதாகச் சொல்கிறார்கள். கடந்த ஓரிரு வருடங்களாக பலத்த போட்டியால் சில படங்கள் 5 கோடி முதல் 10 கோடி வரை விற்கப்பட்டு வந்துள்ளது. ஆனால், திடீரென தொலைக்காட்சி நிறுவனங்கள் அப்படி படங்களை வாங்கியதை நிறுத்திவிட்டன. 

 

அதனால்தான் தயாரிப்பாளர் சங்கமும் திரைப்பட விழாக்களுக்கு ஒரு குறிப்பிட்ட சேனலைத் தவிர வேறு எந்த சேனலையும் கடந்த சில மாதங்களாக அழைக்கவில்லை. இந்தப் பிரச்சனை இன்னமும் போய்க் கொண்டுதானிருக்கிறது. தனுஷ் நடித்த 'மாரி' உட்பட பல படங்களின் சாட்டிலைட் உரிமை இன்னும் விற்கப்படாமலே உள்ளதாம். படம் முடிவடைந்து சென்சார் ஆன பல படங்களும் சாட்டிலைட் வியாபாரம் முடிவடையாததால் வெளியீட்டுத் தேதியை தள்ளிக் கொண்டே வருகிறார்களாம். இந்த முடக்கம் சீக்கிரமே முடிவடையாதா என பாதிக்கப்படுபவர்கள் தவித்து வருகிறார்கள் என மூத்த திரையுலகப் பிரமுகர் ஒருவர் நம்மிடம் தெரிவித்தார்.

.