'அருந்ததி'க்குப் பிறகு அசத்துவாரா அனுஷ்கா ?

Posted in சினிமா செய்திகள்

தென்னிந்தியத் திரையுலகத்தில் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் வெளிவருவது மிகவும் குறைவே. ஹிந்தித் திரையுலகத்தில் கடந்த சில

வருடங்களாக அப்படிப்பட்ட படங்கள் வெளிவந்து வியாபார ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன. தென்னிந்தியத் திரையுலகில் தன்னுடைய அழகாலும், தோற்றத்தாலும் சமீபத்தில் பல ரசிகர்களை வசீகரித்தவர்களில் அனுஷ்கா முதன்மையானவர். கொஞ்சம் மெச்சூர்டான முகம் என்றாலும் அதை அவருடைய உடல் அழகு மறைத்துவிடுகிறது. இப்படி ஒரு தோற்றத்தில் தென்னிந்தியாவில் தற்போதைக்கு வேறு யாரையும் பார்க்க முடியாது என பெயர் எடுத்துவிட்டார் அனுஷ்கா. 

2005ம் ஆண்டு 'சூப்பர்' என்ற படத்தில் அறிமுகமான அனுஷ்கா தெலுங்கில் பல படங்களில் நடித்த பிறகே தமிழில் புகழ் பெற ஆரம்பித்தார். 2009ம் ஆண்டு கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் அனுஷ்கா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த 'அருந்ததி' திரைப்படம் அனுஷ்காவின் திரையுலக வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்து அவருடைய படங்களின் வரிசையில் முக்கியப் படமாக இடம் பிடித்தது. அதன் பின் அனுஷ்காவுக்கென தமிழ், தெலுங்குத் திரையுலகில் தனி இடம் கிடைத்தது. 

தற்போது சாதனை படைத்துள்ள 'பாகுபலி' படத்தின் முதல் பாகத்தில் அனுஷ்காவிற்கு அதிக முக்கியத்துவமில்லை. பிரபாஸும், ராணாவும்தான் கதையை ஆக்கிரமித்திருந்தார்கள். ஆனால், அடுத்து வெளிவர உள்ள 'ருத்ரமாதேவி' படத்தில் அனுஷ்கா டைட்டில் ரோலில் நடிப்பதால் மீண்டும் ஒரு 'அருந்ததி' வெற்றியை தமிழ், தெலுங்குத் திரையுலகங்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றன. 

 

அப்படி ஒரு அசத்தலான வெற்றி அனுஷ்காவுக்குக் கிடைத்தால் அடுத்த 'லேடி சூப்பர் ஸ்டார்' என தாராளமாக அழைக்கலாம்.

.